சென்னை விமான நிலையத்தில் பயணியின் கைப்பையில் தோட்டா
துப்பாக்கி குண்டு - கோப்புப்படம்
சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விஜய கிருஷ்ணா (வயது 35) என்ற பயணியின் கைப்பையை ஸ்கேனில் பரிசோதித்த போது, அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியின் கைப்பையை தனியே எடுத்து சென்று பரிசோதித்தனர். அந்த கைப்பைக்குள், துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அது 9 எம்.எம் ரகத்தை சேர்ந்த குண்டு ஆகும். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பயணி விஜய கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது விஜய கிருஷ்ணா, 'தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், காலையில் லண்டனிலிருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, தற்போது டிரான்சிட் பயணியாக மதுரை செல்ல உள்நாட்டு விமான நிலையம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தான் அமெரிக்காவில் ரைபிள் கிளப் உறுப்பினர். எனவே எனது சொந்த உபயோகத்திற்காக துப்பாக்கி குண்டுகளை, அமெரிக்காவில் இருக்கும்போது, ஆன்லைனில் வாங்கினேன், அதில் ஒரு குண்டு தவறுதலாக இந்த பையில் இருந்திருக்கிறது. நான் அந்தப் பையை கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன்'என்று தெரிவித்தார்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள் விஜய கிருஷ்ணாவின் பயணத்தை ரத்து செய்து, அவரையும், துப்பாக்கிக் குண்டையும், சென்னை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலைய காவல்துறையினர், இது சம்பந்தமாக விஜய் கிருஷ்ணாவிடம் மேலும் விசாரணை நடத்தினர். அதன்பின்பு, துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த காவல்துறையினர், விஜய கிருஷ்ணாவை, விசாரணைக்கு அழைக்கும் போது, மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நேற்று இரவு அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu