கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2 திட்டம் ஜனவரியில் திறப்பு
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னை குடிநீர் வாரியம், 15 மண்டலங்களுக்கு குழாய் மற்றும் லாரி வழியாக வினியோகம் செய்ய, தினமும் 110 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது, 100 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி 1 கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.
இந்நிலையில், 1,516.82 கோடி ரூபாயில், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் உடைய கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி 2 திட்டத்தில், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 2019ல் துவங்கியது.
இதில், கடல் நீரை உள்வாங்கும் குழாய், உவர் நீரை வெளியேற்றும் குழாய் ஆகியவை, கடலில் பதிக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம் மற்றும் 48 கி.மீ., துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டது.
இந்த பணி, கடந்த மே மாதம் முடிந்தது. ஆனால், மின் இணைப்பு வழங்குவது, சாலை சந்திப்புகளில் குழாய் இணைப்பு போன்ற பணிகள் தாமதமானதால், சோதனை ஓட்டமும் தாமதமானது.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, மூன்று மாதங்களுக்கு முன் சோதனை ஓட்டம் துவங்கியது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த மாதம், நெம்மேலி 2 திட்டத்தை திறக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய 12 இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்திட்டத்தால், 9 லட்சம் மக்கள் பயனடைவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu