கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் : ஜெ. ராதாகிருஷணன்
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறோம். கரோனா தடுப்பு பணியில் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. டெக் -மகேந்திரா நிறுவனம் சார்பாக மூன்று ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளது.
தடுப்பூசி இருப்பு குறைவால் மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.கொரோனா நோயினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1.1 சதவீதம். தினசரி பரிசோதனை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டம் கூடுவதை கடந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் அரசு நெறிமுறைகளை கடந்து கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். இதுவரையில் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: கரோனா நோய் எப்போது முடியும் என்று தெரியவில்லை எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.அரசு விதிமுறைகளை கடந்து ஒவ்வொரு தனி மனிதரும் கரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் அப்போது மட்டுமே கரோனா நோயில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளமுடியும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu