எங்கள் மயிலாப்பூர் என்று சொல்லும் போது மகிழ்ச்சி: கனிமொழி எம்பி
மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரில் நடைபெற்ற, அன்பின் பாதை அறக்கட்டளை, KEH குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு இணைந்து நடத்திய "எங்கள் மயிலாப்பூர்" பள்ளிகளுக்கான மாபெரும் அறிவுசார் மற்றும் கலைத்திறன் போட்டிகள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அன்பின் பாதை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் க.கிளமெண்ட், KEH குழுமத்தின் நிறுவனத் தலைவர் வசந்தகுமார் வாசுதேவன், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி தாளாளர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., இந்த நிகழ்ச்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். எங்கள் மயிலாப்பூர் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சொல்லும் போது வரும் உணர்வு வேறு எங்கும் வராது. மிகப் பழமையான கோயில், தேவாலயம், மசூதி இங்கு உள்ளது. இது திருஞான சம்பந்தர் பாடிய தளம் என்றார்.
சிட்டி சென்டர், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் உள்ளன. பழமை புதுமை என எல்லாம் இருக்கும் ஒரு இடம் மயிலாப்பூர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வோன்று தான் இருக்கும். ஆனால் இங்கு தான் எல்லாம் இருக்கிறது. இந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் திறமை இருக்கிறது. ஒருவருக்கு நடனம், பாட்டு, என பல்வேறு வகைகளில் திறமைகள் உள்ளது.
உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்று அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். உலக புகழ்பெற்ற எத்தனையோ எழுத்தாளர்களின் முதல் பதிப்புகள் புறக்கணிக்கப்பட்டது தான். அவை தான் இன்று பலரால் விரும்பி படிக்கவும் படுகிறது. என் திறமை என் கனவு மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் இது தான் உட்சம் என்றும் எடுத்துக்கொள்ள கூடாது. மென்மேலும் வளர வேண்டும். தன்னம்பிக்கை, உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu