முன்னாள் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் வழக்கு

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு, குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளிச்சிருக்குது.
அப்போது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஏற்கெனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu