சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க டெண்டர்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க  டெண்டர்
X

கோப்புப்படம் 

சென்னையில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 30.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறந்துள்ளதால், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய பேருந்துகளை வாங்குவதற்கு, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது.

அடுத்தக்கட்டமாக, 500 பேட்டரி பேருந்துகளை இயக்கவும், மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது 3,400 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயணிகளின் தேவையை போக்க, கூடுதல் பேருந்துகள் வாங்குவது, மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் தனியார் பேருந்துகளை இயக்க பர்மிட் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

மேலும் புதிதாக பேட்டரி பேருந்துகள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 100 பேட்டரி பேருந்துகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டது. தற்போது, மேலும் 500 பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளோம். இதற்கான, முழு விபரங்கள் அடுத்த சில நாளில் வெளியிடப்படும்.

பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்க உள்ளோம். இந்த பேட்டரி பேருந்துகளை தனியார் பங்களிப்போடு இயக்க உள்ளோம். பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அடுத்த சில மாதங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!