470 டி.எம்.சி. தண்ணீர் வரத்தால் 120 அடியாக நிரம்பி காட்சிதரும் மேட்டூர் அணை

மேட்டூர் அணை
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் என்ற ஊரில் கட்டப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை என்று அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் உள்ள அணைகளில் மிகப்பெரியது. இந்த அணையின் உயரம் 120 அடி. மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட பல மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் கீழ்காவிரி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1700-க்கும் மேற்பட்ட மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரமே மேட்டூர் அணைதான். அந்த பகு்தி மக்கள் காவிரி ஆற்றை காவிரி தாய் என்று தான் வழிபடுவார்கள்.
காவிரி உற்பத்தியாவது கர்நாடக மாநிலம் குடகு மலையில். கர்நாடகத்தில் மழை பெய்து செழித்தால் தான் அங்குள்ள அணைகள் நிரம்பி திறந்து விடப்படும் தண்ணீர் காவிரியில் விடப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் தண்ணீரை பங்கீடு செய்வதில் கர்நாடகாத்திற்கும், தமிழகத்துக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையத்தை 1992-ம் ஆண்டு அமைத்தது. 192 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கர்நாடகம் அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதும் கர்நாடகம் தண்ணீர் திறப்பதில் பிடிவாதம் காட்டியது. இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பின் படி இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து ஜூன் 1-ந் தேதி முதல் இதுவரை 470 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் உருவான 1992-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு பார்த்தால் இந்த ஆண்டுதான் தமிழகத்துக்கு கர்நாடகத்திலிருந்து அதிகபட்சமாக 470 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் இருந்து மேலும் 50 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இந்த வருடம் தான் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 75 நாட்களுக்கு மேலாக 120 அடியாக நீடித்து இருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் குறுவை, சம்பா சாகுபடி சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu