நாளை மெகா தடுப்பூசி முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா. சுப்ரமணியன்
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் தங்கும் நரிகுறவ சமூக மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நரிகுறவ சமூக மக்களுக்கு பழங்கள் மற்றும் பிரட் அடங்கிய கூடைகளை அவர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை மொத்தம் 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 83 சதவீதம் பேர் முதல் தவணையும், 40 சதவீதம்பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சென்னை மாநகராட்சி தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.
சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்றோர் 2 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதன் சிறப்பு நடவடிக்கையாக நாளை (10-ந் தேதி) 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை இல்லாத வகையில் அதிகம் பேர் பயன்பெறும் முகாமாக நாளை நடைபெறும் முகாம் இருக்கும். மக்கள் அவர்களது வீட்டின் அருகிலேயே நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக விரைவில் உயர்த்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, துணை ஆணையாளர் டாக்டர் எஸ்.மனிஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா, மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu