தொழிற்சாலையில் அமோனியம் வாயுக் கசிவு: மக்களுக்கு மூச்சுத் திணறல்

தொழிற்சாலையில் அமோனியம் வாயுக் கசிவு: மக்களுக்கு மூச்சுத் திணறல்
X

வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலை நுழைவுவாயில் 

எண்ணூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திரவ அமோனியம் கசிந்துள்ளது. கடலுக்கு அடியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இந்த கசிவு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏறப்பட்டன.

இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.

இந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

மேலும், பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வரும் மக்களிடையே காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், அமோனியம் வாயுக் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலையில் வாயிலில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய வாயு, 2,090 மை.கி. ஆக உள்ளது. அதேபோல், கடலில் 5 மை.கி. ஆக இருக்க வேண்டிய வாயு, 49 மை.கி. ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நிலவரப்படி பெரிய குப்பம், சின்ன குப்பம், கதிரவாக்கம் ரயில்வே பாலம், எண்ணூர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றை ஆய்வு செய்ததில் அமோனிய வாயு கசிந்தது சீராகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலுடன் மட்டுமே குழாயை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு