கூட்டணியைவிட்டு வெளியேறினால் பா.ம.கவினருக்குதான் இழப்பு: ஜெயக்குமார்
டாக்டர் ராமதாஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். (பைல் படம்)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில உயர்நிலை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இதில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி பங்கேற்றனர். அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது:
கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை.
சரியான தலைமை இல்லாததால் அ.தி.மு.க., தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பா.ம.க.,வின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம்.
பா.ம.க.,வால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன, ஆனால், கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த தேர்தல் பணிகளில் அ.தி.மு.க., தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு வேளை இவர்கள் ஒத்துழைப்பு தந்திருந்தால் சட்டசபை தேர்தலில் தற்போது வெற்றி பெற்ற 4 தொகுதிகளை காட்டிலும் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தனித்து போட்டி என்பது பா.ம.க.,வின் தனிப்பட்ட முடிவு. யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த முடிவை எடுத்தார்கள் என தெரியவில்லை. இதனால் அக்கட்சிக்கு தான் இழப்பு. அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை என்பது கிடையாது. அது பற்றி பா.ம.க., பேச வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் எங்களுடன் இருக்கும் வரை எந்த இழப்பும் கிடையாது. அவர்களுக்கு தான் இழப்பு. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அவர்களுக்கு தான் பதிப்பு. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும். ஆளுங்கட்சியினர், மக்களை முழுமையாக மொட்டையடித்து விட்டனர்.
இது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எனவே, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எனக்கூறினால் மக்கள் கை கொட்டி சிரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu