சென்னை பெருவெள்ளத்திற்கான காரணம் பற்றி அறப்போர் இயக்கம் விளக்கம்

சென்னை பெருவெள்ளத்திற்கான காரணம் பற்றி அறப்போர் இயக்கம் விளக்கம்
X

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் மீட்டு வரும் காட்சி (கோப்பு படம்).

சென்னை பெருவெள்ளத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது வீடுகளுக்குள் தண்ணீர் நுழைய காரணம் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் வடிகால் என்று பலர் கூறி வந்த நிலையில் மற்றொரு முக்கிய காரணத்தை சுட்டிக்காட்டி உள்ளது அறப்போர் இயக்கம்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. நான்கு நாட்கள் பெய்த இந்த பெரு மழையால் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதற்கு முக்கிய காரணம் வடிகால் பிரச்சனை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியது என பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், புதிய சாலைகளால் தான் வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்ததாக சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை என அறப்போர் இயக்கம் விரிவாக விளக்கி உள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சென்னையில் இத்தனை வருடங்களாக பழைய சாலை உயரத்திலேயே புதிய சாலைகளை அமைத்திருந்தால் பல பகுதிகளில் வெள்ள பிரச்சனைகள் வராமலேயே இருந்திருக்கும். சாலை அமைப்பவர்களுக்கு மழை பெய்தால் தண்ணீர் எங்கிருந்து எந்த பக்கமாக ஓடும் என்ற புரிதலே இருப்பதில்லை. அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளிடம் அதற்கான திட்டமும் இருப்பதில்லை. எந்த மக்களின் வசதிக்காக சாலை அமைக்கப்படுகிறதோ அந்த மக்களின் வீடுகளை குழிக்குள் தள்ளி சாலை உயரத்தை அதிகரித்து அலட்சியமாக வேலை செய்கிறார்கள்.

இவர்களை தடுக்கும் பொருட்டு, பழைய சாலையின் உயரத்தை விட அதிகரிக்காமல் புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார். முதல்வர் உத்தரவையே மதிக்காத திமுக ஆட்சியில் தலைமை செயலாளர் உத்தரவை எல்லாம் ஒப்பந்ததாரர்கள் மதிப்பார்களா? தொடர்ந்து சென்னை முழுவதும் சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 50 வருடங்களுக்கு மேல் பயன்பட வேண்டிய வீடுகள் 20 வருடத்திற்குள் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு குழிக்குள் தள்ளப்படுகிறது.

சாலையை விட வீடு பள்ளத்தில் தள்ளப்படுவதால் வீட்டில் பெய்யும் மழை நீர் வெளியேறாது. மேலும் சாலையில் பெய்யும் மழை நீர் வீட்டு உள்ளே வரும். மோட்டார் வைத்து நீரை இறைத்து வெளியேற்றுவது மட்டுமே இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. அல்லது பல லட்சங்கள் செலவு செய்து தங்கள் வீட்டை சாலையை விட உயர்த்தி தூக்கி நிறுத்த வேண்டும். இதை பற்றியெல்லாம் அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்லை. வெள்ளம் வந்தால் பிரெட், போர்வை கொடுத்து 6000 நிவாரண தொகை கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் தற்போது அறப்போர் இயக்கம் தலையிட்டு வருகிறது. குறிப்பாக சாலைப்பணிகள் தரமாக இல்லை என்றால் அதற்காக போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் சட்ட ரீதியான போராட்டத்தையும் கையில் எடுத்து வருகிறது. இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது சென்னை வெள்ளத்திற்கான காரணம் பற்றி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா