இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரம்: மருத்துவ உதவியாளர் பணியிடை நீக்கம்

இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரம்: மருத்துவ உதவியாளர் பணியிடை நீக்கம்
X

சிசுவின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த கீழ்பாக்கம் மருத்துவமனை

சென்னையில் உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரத்தில் மருத்துவ உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியா. இவருக்கு, கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை இறந்த நிலையில் வீட்டிலேயே பிறந்துள்ளது. பின்னர் அங்கம்பக்கத்தினர் உதவியுடன் மீன்பாடி வண்டியில் சௌமியாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு சௌமியா நலமுடன் உள்ளார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் சடலத்தை தந்தையிடம் கொடுத்துள்ளனர். ஆனால் இறந்த குழந்தையின் சடலத்தை உரிய முறையில் துணியால் மூடி கொடுக்காமல் மருத்துவ அட்டைப் பெட்டியில் வைத்து மருத்துவமனை பணியாளர்கள் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த குழந்தையின் சடலம் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் தனது குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என மசூத் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு ரூ.2500 தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடயே குழந்தையின் சடலத்தை அட்டைப்பெட்டியில் வைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரத்தில் மருத்துவ உதவியாளர் பன்னீர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil