கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வந்தது

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வந்தது
X

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட  நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வந்தது.

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் 4 டிஎம்சி. தண்ணீர் திரும்ப கிடைத்துள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர், கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். இரண்டு தவணைகளாக இந்த நீரை வழங்கும் வகையில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 15 முதல், தமிழகத்தின் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் எல்லையை கடந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் மாத இறுதிவரை, 0.58 டிஎம்சி நீர் வந்து சேர்ந்தது. இவை 2020 - 21ம் ஆண்டு நீர் வழங்கும் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை முதல் கிடைத்து வரும் நீர், நடப்பு 2021 - 22ம் ஆண்டு நீர்வழங்கும் காலத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திற்கு 4.05 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, வினாடிக்கு 562 கன அடி நீர், தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. தமிழக எல்லைக்கு வினாடிக்கு 600 கன அடிக்கு மேல் கிடைத்த நீர்வரத்து, தற்போது மெல்ல குறையத் துவங்கி உள்ளது. இதனால், 5 டிஎம்சி. நீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதுமட்டுமின்றி விரைவில் வடகிழக்கு பருவ மழை காலமும் துவங்க இருக்கிறது. எனவே, தொடர்ந்து நீர் வரத்து கிடைக்கும். அதன் காரணமாக, ஆந்திர அரசு தண்ணீர் வழங்காவிட்டாலும் இந்தமுறை எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!