திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கம்

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கம்
X

எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை.

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ இணைப்பு சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை மற்றும் மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கும் பல்வேறு இணைப்பு சேவைகளை ஏற்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை (Route S70K) மற்றும் எம்ஆட்டோ ப்ரைடு (LEGGO) மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவை திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இந்த இணைப்பு சேவை வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இன்று (30.06.2023) திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடக்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ கனெக்ட் சேவைகள் (Metro Connect Services), மெட்ரோ பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தினசரி போக்குவரத்துத் தேவைகளுக்காக மெட்ரோ இரயில் சேவையைப் பயன்படுத்துவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிப்பதற்காகவும் இயக்கப்படுகிறது. இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு வசதியாக பயணிக்க முடியும்.

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.25 என்ற கட்டணத்தில் 10 மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவையானது திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை (Route S70K) திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலைக்கு இடையே இயக்கப்படும், அண்ணாநகர் மேற்கு பணிமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ், பக்தவத்சலம் மெமோரியல் மகளிர் கல்லூரி, கொரட்டூர் பேருந்து நிலையம், கொரட்டூர் இரயில் நிலையம் ஆகிய இடங்களை உள்ளடக்கியது. மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட இந்தப் பாதை, அப்பகுதியில் வசிப்பவர்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கான முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு சேவை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை (Route S70K) மற்றும் மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவை வசதியை தொடங்கியுள்ளது. இந்த சேவைகள் வசதியான மற்றும் திறமையான பயணத்தை வழங்குவதோடு, தினசரி பயணங்களை சுமூகமாகவும் பயணிகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும். இந்த இணைப்பு சேவை வசதிகளை மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!