சென்னை மாநகராட்சி: மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி
சென்னை மாநகராட்சி
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் தலைநகர் சென்னை அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை யாரும் மறந்திருக்க முடியாது.
அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக மழைக் காலத்தில் சென்னை பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டது. சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதோடு, புறநகர் பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.
இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu