சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு சிகிச்சை

சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட  52 பேருக்கு சிகிச்சை
X
எண்ணூரில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு 11.45 மணியளவில், அந்த தொழிற்சாலையின் அம்மோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்ததால், நிலைமை சரிசெய்யப்பட்டது.

இந்த வாயு கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அம்மோனியாவை வெளியே எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை முற்றிலுமாக சரிசெய்து, உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே, அம்மோனியா கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!