பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகள்: பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்

பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகள்:  பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்
X

பாஜக தலைவர் அண்ணாமலை 

பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில், போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை திருவேற்காட்டில் இருந்து நேற்று மதியம் வள்ளலார் நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியின் இருக்கைக்கு கீழே பலகை உடைந்தது. இதில், அந்த பெண் பயணி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை திருவேற்காட்டில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரி ஒருவர், இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து, கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அரசு நிர்வாகம் என்ன நிலைமையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

சரியாகப் பராமரிக்கப்படாத பேருந்துகளால், மழைக் காலங்களில் பேருந்துகளுக்குள் தண்ணீர் ஒழுகுவது, பழுதடைந்த இருக்கைகள் என அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருக்கிறது.

போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழக அரசுத் துறைகளும் இதைப் போன்ற பரிதாப நிலையில்தான் இருக்கின்றன. மக்களின் வரிப்பணம் முழுவதும் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்

Tags

Next Story