பிரதமரின் 'தேர்வு குறித்த விவாதம்' நிகழ்ச்சியை மாணவர்களுடன் கண்டுகளித்த தமிழக ஆளுநர்
பிரதமரின் 'தேர்வு குறித்த விவாதம்' நிகழ்ச்சியினை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி. சென்னை ராஜ்பவனில் இருந்து கண்டு களித்தார். இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், சேத்துப்பட்டு சர்வோதயா பள்ளி, சென்னை தக்கார் பாபா பள்ளி மற்றும் சி.எல்.ஆர்.ஐ மற்றும் சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
தேர்வெழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், வரவிருக்கும் தேர்வுகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் தேசிய கல்விக் கொள்கையின் விரிவான உள்ளடக்கிய மற்றும் முழுமையான கட்டமைப்பை எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் மீது பெற்றோர்கள் தங்களது விருப்பங்களைத் திணிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக மாணவர்களை பிரதமர் பாராட்டினார்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுடன் உரையாடிய தமிழக ஆளுநர், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தங்களது பொன்னான நேரத்தை முறையாக செலவிட வேண்டும் எனவும் கூறி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், ஆளுநரின் முதன்மை செயலர் ஆனந்த் ராவ் வி. பாட்டீல், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை, கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையர் (பொறுப்பு) டி.ருக்குமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu