சென்னை அஞ்சலகங்களில் வரும் 29ம் தேதி முதல் மகளிர் மதிப்புத் திட்ட சிறப்பு முகாம்

சென்னை அஞ்சலகங்களில் வரும் 29ம் தேதி முதல் மகளிர் மதிப்புத் திட்ட சிறப்பு முகாம்
X
சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் வரும் 29ம் தேதி முதல் மகளிர் மதிப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

"சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு மகளிர் மதிப்புத் திட்டத்தை மத்திய அரசின் நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் இந்தத் திட்டம் துவங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் 29ம் தேதி முதல் 31 வரை நடைபெறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலராக இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5% என்ற அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கூட்டப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.

குறைந்தபட்சம் ரூ.1000/- மற்றும் நூறு ரூபாய்களின் மடங்குகளில் கணக்கைத் துவங்கலாம். ஒரு தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.2,00,000/-க்கு உட்பட்டு எத்தனை கணக்குகளையும் தொடங்கலாம். ஏற்கனவே இருக்கும் கணக்குக்கும் மற்ற கணக்கைத் தொடங்குவதற்கும் இடையே மூன்று மாத இடைவெளி பராமரிக்கப்படும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஓராண்டு முடிந்த பிறகு, தகுதியான இருப்பில் பகுதியளவு 40% திரும்பப் பெறலாம்.

கணக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். எந்தவொரு காரணத்திற்காகவும் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள் முடிந்த பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முடித்துக் கொள்ளலாம் மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய வட்டி, திட்டத்திற்கு குறிப்பிடப்பட்ட விகிதத்தை விட இரண்டு சதவீதம் குறைவாக இருக்கும்.

இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு முயற்சியாகும். இந்த திட்டம் 2 வருட குறுகிய காலத்தில் முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்டுவதால், இது நிச்சயமாக பெண் முதலீட்டாளர்களை குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரிக்கும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகி அதன் பிரத்யேக பலன்களைப் பெற ஒரு கணக்கைத் தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்