முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் மறுப்பு...
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தவர் வேலுமணி. இவர், தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுகவில் அமைப்புச் செயலாளராகவும், வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த வேலுமணி மீது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் முறைகேடு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். குறிப்பாக, அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. அதே சமயம் அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கருத்து:
முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கில் நீதிபதிகள் பிரகாஷ், டீக்கா ராமன் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் வழகுப்பதிவு செய்ய முடியும் என்கிற வேலுமணியின் வாதத்தை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்கில் தலையிட எந்தவித காரணமும் இல்லை என்பதால் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
மேலும், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யப்படக் கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல் நிலைய உயர் அதிகாரிகளைப் போல செயல்பட வேண்டி உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu