மிக்ஜம் பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள்: அக்டோபரில் முடிக்க இலக்கு
வெள்ளம் பாதித்த பகுதி - கோப்புப்படம்
வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக சேதங்களை சந்தித்து வருகின்றன.
இம்மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பிற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், அரசால் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் வழங்கிய பரிந்துரைப்படி நகராட்சி நிர்வாகம், நீர்வளம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் வாயிலாக மழைநீர் கால்வாய், சிறுபாலம், ரெகுலேட்டர்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிட்டுள்ளது. ஆனால், 2023 டிசம்பரில், 'மிக்ஜம்' புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
தென் சென்னை பகுதிகளில் வெள்ளநீர் வடிவதற்கு 15 நாட்களுக்கும் மேலானது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் திருப்புகழ் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை வழங்கினர்.
'மிக்ஜம்' புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பை சரி செய்யவும், பிற வகையான வெள்ள தடுப்பு பணிகளை செய்யவும் நீர்வள ஆதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதை செயல்படுத்தும் வகையில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள, சென்னை மண்டல நீர்வளத் துறைக்கு, 324 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில், தென் சென்னையின் செம்பாக்கம் உபரிநீர் கால்வாயில் இருந்து நன்மங்கலம் ஏரி வரை, 24.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது.
மூவரசம்பேட்டை ஏரி முதல் கீழ்க்கட்டளை கால்வாய் வரை, 30.6 கோடியில் மூடுகால்வாய், நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 39.8 கோடியில் இரண்டு வழி சிறு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
நேமம் ஏரியில் உபரிநீர் கால்வாய் ரெகுலேட்டர் மற்றும் சேதமடைந்த கரை சீரமைப்புக்கு 12.2 கோடி ரூபாய், புரசைவாக்கம் அருகே கூவம் கரை சீரமைப்பு பணிகள் 17.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் சேதமடைந்த கரைகளை சீரமைக்கும் பணிகள், 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அடையாற்றின் கால்வாயை ஆழப்படுத்துவது, சென்னை புறநகர் சோழவரம், செங்குன்றம் ஏரிகளை சீரமைப்பது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணியாற்றின் பல்வேறு இடங்களில் கரைகளை சீரமைப்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இடங்களில் மூடு கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பணிகளை, நீர்வள ஆதாரத் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகாவில், 65.8 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று இடங்களில் தரைக்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட்டால் ஆன மூடு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை துவங்க நீர்வளத்துறை ஏற்பாடுகளை துவங்கியுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu