உரங்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

உரங்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
X

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

உரங்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையானஉரங்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த 5 மாத கால திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருள்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கப் பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்யதுள்ளது. முக்கியமாக, விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை என்று கடந்த இரண்டு நாள்களாக ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும், செய்திகள் வெளி வந்துள்ளன.

குறிப்பாக, டெல்டா பகுதிகள் தவிர்த்து, கிணற்றுப் பாசனப் பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உட்பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் சுமார் 60 சதவீதம் வேளாண் பெருமக்கள் பயிர் செய்துவிட்டு, தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில், பயிர்கள் நன்றாக வளர்வதற்கும், விவசாயிகளுக்கு இந்த பருவத்திற்குத் தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்த கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனை கடைகளிலும் தேவையான அளவு இல்லை என்றும், தேவைப்படும் உரத்தின் விலை, கடைக்கரார்களாலும், விற்பனையாளர்களாலும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஆடி மாதம் விதைத்த நெல்மணிகள் முளைத்து பயிராக வளரக்கூடிய

சூழ்நிலையில், அதாவது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிரின் வளர்ச்சிக்கு உரங்கள் பெருமளவில் தேவைப்படும். அப்போது தான் தமிழர்களின் அறுவடை மாதமான தைத் திங்களில், விவசாயிகளின் தன்னலமற்ற உழைப்புக்கு ஏற்ற பலன் `அமோக விளைச்சல் அமோக விளைச்சல் அமோக விளைச்சல்' என்று மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படும்.

எனவே தான், ஆண்டுதோறும் தமிழர்கள் தை முதல் நாளை பொங்கல் திருநாளாக, சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவார்கள்.

இதை கருத்தில் கொண்டே எப்போதும் ஜெயலலிதாவின் அரசு, வேளாண் பருவத்தின் போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் விதை நெல், விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு தயார் நிலையில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும்.

ஆனால், திமுக அரசோ, பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாகவோ, தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ, அதற்குண்டான முயற்சிகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை.

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது என்று ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் கடந்த இரண்டு நாட்களாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, தமிழ் நட்டில் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகள் உரத் தட்டுப்பாட்டால், குறிப்பிட்ட காலத்தில் பயிர்களுக்கு உரமிடாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலையைப் போக்கவும், இந்த அரசு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியிருந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!