அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூல்: என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்பட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கல்வி உள்பட அனைத்து தகுதியுள்ள கட்டணங்களை அரசே செலுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் சில கல்லூரிகள் 7.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு மூலம் சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் கட்டணத்தை செலுத்த சொல்லி வலியுறுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் கல்வி கட்டணத்தை அந்த மாணவர்கள் செலுத்த சொல்லி வற்புறுத்தக்கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக மேலும் புகார் வந்த நிலையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் 'கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகங்கள் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் இடம் பெற்றவர்களிடம் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்க வேண்டாம். இதை மீறினால் அந்த கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை திரும்ப பெற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பரிந்துரைக்கும்' என்று கூறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu