கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்
அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கொளத்தூர் தொகுதியில் நிவாரணபொருட்கள் வழங்கினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடன் கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இன்று (17.11.2021) நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் பல்வேறு அரசு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகிய அமைச்சர்களை பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிட உத்திரவிட்டார்கள் என கூறினர்.
கொளத்தூர் தொகுதியில் பெரும்பாலான இடங்கள் தாழ்வான பகுதியாக உள்ளதால், கனமழை வரும் பொழுது அதிகபடியான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி மழைநீர் எல்லாப் பகுதிகளிலும் இரண்டே நாளில் வெளியேற்றப்பட்டு விட்டது.
முதலில் வார்டு எண் 69க்கு சென்ற அமைச்சர்கள், பொது மக்களுக்கு வழங்குவதற்காக துணிப் பைகளில் அடைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார்கள்.
ஒவ்வொரு பையிலும் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து திருப்தி அடைந்தப் பிறகே பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியை மேற்கொண்டார்கள். அரிசி, போர்வை உட்பட 12 பொருட்கள் துணி பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.
வார்டு எண்.69ல் ஞானம்மாள் தோட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். வார்டு எண்.68ல் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் மழைநீரால் சேதமடைந்த அனைத்து தெருக்களையும் சாலைகளையும் பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தார்கள். சிறு சிறு பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கும்படி ஆணையிட்டார்கள். அதன் பிறகு, சுமார் 5000 பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்கள்.
வார்டு எண்.67ல் உள்ள ராமர் கோயில் பகுதி மூர்த்தி தெரு, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கும் சென்று சேதமடைந்த தெருக்களையும், தண்ணீர் தேங்கி, மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த பின்னர், பொது மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்கள்.
வார்டு எண். 65 மற்றும் 64ல் உள்ள ராஜாஜி நகர் டாக்டர் அம்பேத்கார் நகர் வினோபா நகர், கங்கா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்கள். கொளத்தூர் தொகுதி முழுவதும், நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம், கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்தார்கள். இப்பகுதியிலுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu