இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர் நாசர் எச்சரிக்கை
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஆவின் பால், பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன், அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின்) மற்றும் பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகிறது.
எனவே ஆவின், பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu