மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுக்க ஆட்சேபனை இல்லை-சென்னை மாநகராட்சி

மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுக்க ஆட்சேபனை இல்லை: வழக்கை வாபஸ் பெற்ற சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு இடுகாட்டிலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது பொது மக்களின் எதிர்ப்பால், வேலங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது.
இந்நிலையில், வேலங்காட்டிலிருந்து கணவரின் உடலை உடலை தோண்டி எடுத்து, கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர் அந்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆனந்தி சைமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி, வேலங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது
வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், மாநகராட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம், மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை வேலங்காடு இடுகாட்டிலிருந்து தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu