90 ஆயிரத்தை சாலையில் வீசி சென்ற ஆட்டோ டிரைவர், பதறிய பயணி, மீட்ட போலீசார்
90 ஆயிரத்தை மீட்ட போலீசார்.
மணலியை அருகே ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தபீவி (வயது 60). இவர், டெல்லி செல்வதற்காக ஆண்டார்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரயில் மூலம் சென்டிரல் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து டில்லிக்கு ரயிலில் ஏறினார். டில்லி விரைவு ரயிலில் ஏறிய அவர், தலையணையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.90 ஆயிரம் தலையணையோடு மாயமானதை கண்டு திடுக்கிட்டார்.
தனது மகன் முகம்மது வாசிம் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பரமானந்தம் உத்தரவின்படி, குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர் மேற்பார்வையில் போலீசார் விம்கோ நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் சந்தபீவி வந்து சென்ற ஆட்டோவின் நம்பரை வைத்து அதன் டிரைவரான ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (66) என்பவரிடம் விசாரித்தனர். அவர், சந்தபீயை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு திரும்பி வந்தபோது ஆட்டோவில் பழைய துணி மூட்டை இருப்பதைப் பார்த்துள்ளார். யாரோ வைத்துவிட்டு சென்றுவிட்டதாக நினைத்து, அதனை சாலையோரம் தூக்கி வீசியதாக தெரிவித்தார்.
போலீசார் ஆட்டோ டிரைவர் தூக்கி வீசியதாக கூறி இடத்திற்கு சென்றனர். ஆண்டார்குப்பம் அருகே சாலையோரம் பணத்துடன் அனாதையாக கிடந்த தலையணை மூட்டையை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. பழைய, அழுக்குத் துணி மூட்டை என நினைத்து யாரும் அதனை எடுக்க வில்லை. புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் மாயமானதாக கூறப்பட்ட ரூ.90 ஆயிரத்தை கண்டுபிடித்த போலீசார், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu