சென்னையில் மாற்றுத்திறனாளிகள் 4-வது நாளாக மறியல் போராட்டம்

பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகளை நியமன தேர்வு இல்லாமல் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போய் காவல்துறையினர் விட்டாலும் மீண்டும் வந்து மறியலில் ஈடுபடுகிறார்கள். கோடம்பாக்கம் பாலத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்ட களத்தை மாற்றினர். காலை 10 மணியளவில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதாவது பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை நகரின் முக்கிய சாலையில் நடந்த போராட்டத்தால் காவல்துறையினர் பரபரப்பு அடைந்தனர். பூந்தமல்லி சாலை சிக்னல் போராட்ட களமாக மாறியதால் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலாக்காக தூக்கி வேனில் ஏற்றினர். பெண்களை மகளிர் காவலர்கள் ஒன்று சேர்ந்து தூக்கி சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் வரை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu