சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் கமிஷனர்
குழந்தை ஒருவரிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிலால்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இணைந்து புரசைவாக்கம், தி.நகர் மற்றும் பெசன்ட்நகர் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று மாலை புரசைவாக்கம் பகுதிக்கு சென்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர்.
அங்குள்ள பல கடைகளின் உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசங்களை வழங்கினர். மனித உயிர்களை காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதலையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும், திரவ சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தலையும், கட்டாயம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினர்.
பின்னர் பாண்டிபஜார் மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, கொரோனா தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன், தெற்கு மண்டல இணை ஆணையாளர் நரேந்திர நாயர், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu