சென்னையில் மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை
பரங்கி மலை ரயில் நிலையம் பைல் படம்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலில் காதலியை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சென்னை கிண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த சத்யா( 22) என்பவரை காதலித்து வந்துள்ளார். சத்யா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காதலர்களாக வலம் வந்து உள்ளனர். இருவரும் தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் வந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
அதேபோல இன்றும் அவர்கள் தொடங்கி மலை ரயில் நிலையத்திற்கு வந்தனர். பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் திடீரென ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த ஒரு மின்சார ரயில் முன் சத்யாவை பிடித்து தள்ளினார். இதில் ரயிலின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட சத்யா சம்பவ இடத்திலேயே தலை தூண்டாகி இறந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ரயில் என்ஜின் டிரைவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சத்யாவை ரயிலுக்குள் தள்ளிவிட்ட இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரயில்வே போலீசார் உடனடியாக அங்கு வந்து இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் சத்யாவுடன் அவருடைய தோழி ஒருவரும் அங்கு வந்து நின்றதும் ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்து சென்றதும் பதிவாகி இருக்கிறது.எனவே சத்யாவின் தோழியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தோழி அளிக்கும் தகவலின் அடிப்படையில் தான் சதீஷும் சத்யாவும் உண்மையிலேயே காதலர்களா அல்லது ஒரு தலைக்காதலால் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதா? காதலர்கள் என்றால் பிரச்சனைக்கு காரணம் என்ன என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்திற்கு பின்னர் ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு மற்றும் காவல்துறை பிரத்தியேக ஏற்பாடுகளை செய்தது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் கேமராக்கள் பொருத்தியும் இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.
நன்றாக பேசிக் கொண்டிருந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் காதலன் தள்ளிவிட்டதில் காதலி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த கொலையில் தொடர்புடைய சதீஷை பிடிப்பதற்காக பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu