குழந்தைக் குரல் பாடகி எம். எஸ். ராஜேஸ்வரி மறைந்த தினமின்று

80களுக்கு பின்பு வந்த பெரும்பாலான படங்களில் குழந்தையின் குரலுக்கு ஜானகியின் குரலே பாடலில் பின்னணியாக ஒலிக்கும் அது ஆண் குழந்தையானாலும் பெண் குழந்தையானாலும் அதற்கேற்றவாறு மாற்றிப்பாடும் லாவகம் ஜானகிக்கு மட்டுமே உண்டு.
ஆனால் அதற்க்கு முன்பே 60,70 களில் பல குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்களுக்கும் குழந்தைக்குரலில் பாட்டு பாடியவர்தான் இந்த எம்.எஸ் ராஜேஸ்வரி.
எம்.எஸ் என்றால் மதுரை சடகோபன் ராஜேஸ்வரி. மதுரை சடகோபன் – ராஜசுந்தரி தம்பதியிருக்கு சென்னை மயிலாப்பூரில் பிப்ரவரி 24, 1932ல் இவர் பிறந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது. சிறுவயதிலிருந்தே பாடுவதில் விருப்பமுள்ளவராக இருந்திருக்கிறார். குடும்ப நண்பர் பி.ஆர்.பந்துலு வழியாக திரைப்பட வாய்ப்பு 1946ல் கிடைக்கிறது. விஜயலட்சுமி திரைப்படத்தில் "மையல் மிகவும் மீறுதே" என்ற பாடலை ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையமைப்பில் பாடினார்.
அந்தக் காலத்தில் உலகப்போரினால் ஏவிஎம் நிறுவனம் சிலகாலம் காரைக்குடியிலிருந்து இயங்கியது. இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் வழியாக ஏவிஎம்மின் அறிமுகம் கிடைத்து மாதச் சம்பளப் பாடகியாக வேலையில் சேர்கிறார். அதற்குப் பிறகு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இசைவாழ்க்கையில் சிறப்பான ஏறுமுகம்.
டவுன் பஸ் படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக்குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே பாடல் யாருடைய கண்களையும் ஒரு கை பார்த்து கண்ணீரை வரவைத்து விடும்.
கைதி கண்ணாயிரம் படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் என்ற பாடலில் இடையில் குழந்தை டெய்சி ராணிக்காக சுசீலாவுடன் ஓங்கி ஒலிக்கும் இவரது குரல்.
இவர் பாடலில் மிக மிக கொள்ளையடித்த பாடல் என்றால் மாப்பிள்ளை மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மிக அருமையான பாடல். சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் அதில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம் என்று அனைத்து பாடல்களுமே குழந்தை குரலில் அற்புதமாக ஒலிக்கும்.
மாஸ்டர் கமலஹாசனுக்காக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் இன்றளவும் நிலைத்திருக்கும் இனிய பாடல் . பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே வா பாடல் அன்றைய இளசுகள் இன்றைய இளசுகள் வரை துள்ளாட்டம் போடவைக்கும் பாடல்.
இப்படியாபட்ட எம்.எஸ்.ராஜேஸ்வரியின் முதுமை குரலை நாம் யாரும் கேட்கவேயில்லை. என்றும் அவருடைய குரலாக இளம்பெண்ணின் குரலையோ அல்லது ஒரு மழலையின் குரலையோ நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்.
நுரையீரல் பிரச்சனை காரணமாக ஓராண்டாக உடல் நலிவுற்றிருந்த அவர் தன் 85வது வயதில் இதே ஏப்ரல் 25( 2018 ) இல் மறைந்திருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu