அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தெரியும் - அதுல இவ்வளவு பெரிய சங்கதி இருக்கா?
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
1985 ஜூலை 24 இதே நாளில் வண்டலூரில் 7 கோடி செலவில் உயிரியல் பூங்காவை அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் திறந்துவைத்தார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா 'வண்டலூர் பூங்கா' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855 ல் தோற்றுவிக்கப்பட்ட, 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும். இங்கு 170 க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.
சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'மெட்ராஸ் பூங்கா' என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள்.
பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது என்பதுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப் பட்டுள்ளது என்பதும் இந்த பூங்காவில் இரவில் தங்கி விட்டு பகலில் பூங்காவிலுள்ள பல்வேறு மிருகங்களை அண்மையில் பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதாவது தெரியுமா?.
இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும் போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).
சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது.
விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855 இல் 'மெட்ராஸ் உயிரியல் பூங்கா' தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.
பின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம் மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.
1975 இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu