தனியார் பள்ளியில் ஆசிரியைகள், மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. தாளாளர் மகன் தலைமறைவு…

தனியார் பள்ளியில் ஆசிரியைகள், மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. தாளாளர் மகன் தலைமறைவு…
X

தனியார் பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் போராட்டம்.

சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாளாளர் மகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடி அருகே உள்ள திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தாளாளராக சிந்தை ஜெயராமன் என்பவர் உள்ளார்.


அவரது மகன் வினோத் பள்ளி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் கவுன்சிலிங் என்ற பெயரில் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் செல்லும் வினோத், மாணவிகளை மிரட்டி பல மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, பள்ளியில் பணி புரியும் ஆசிரியைகளிடமும் அத்து மீறலில் வினோத் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தச் சம்பவம் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மாணவிகள் மட்டும் ஆசிரியைகளும் இந்தச் சம்பவத்தை வெளியே கூற முடியாமல் தவித்து வந்தனர். இருப்பினும், பள்ளி நிர்வாகி வினோத் மீதான குற்றச்சாட்டை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என சில மாணவர்கள் திட்டமிட்டனர்.


இதைத்தொடர்ந்து, பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் சிலர் இரண்டு பிரிவாக பிரிந்து திடீரென கைகலப்பில் ஈடுபடுவது போல் நாடகம் ஆடினர். இதையெடுத்து, மாணவர்களை அழைத்துப் பேசிய பள்ளி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலை 8.45 மணியளவில், பள்ளியை திடீரென முற்றுகையிட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளித் தாளாளர் ஜெயராமனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம், மாணவர்கள் வினோத்தை கைது செய்யுமாறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி, பள்ளிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், மாணவர்கள் திடீரென சென்னை - திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் வெளியே செல்லாதவாறு பள்ளியின் வாயிலை போலீஸார் அடைத்தனர்.

இருப்பினும், பள்ளியின் மற்றொரு வாயில் வழியாக வெளியேறிய மாணவர்கள் சாலைக்கு செல்ல முயன்ற போது, போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது மாணவர்கள் சிலர் போலீஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீண்ட முயற்சிக்குப் பின் போலீஸார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையில் மாணவர்கள் உடன்பட்டு வகுப்பறைக்கு சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பள்ளி நிர்வாகி வினோத் கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பள்ளி தாளாளர் ஜெயராமனை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்,

இதற்கிடையே, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிலரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீஸார் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வினோத்தை தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil