சென்னை ராயபுரத்தில் ரூ. 122 கோடியில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள்.. அமைச்சர் ஆய்வு...
சென்னை ராயபுரத்தில் ரூ. 122 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை அமைச்சர் அன்பரன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் பகுதி - 1 ரூ.77.01 கோடி மதிப்பீட்டில் தூண் தளத்துடன் 9 மாடிகளுடன் 648 குடியிருப்புகளும், பகுதி 2 ரூ. 45.19 கோடி மதிப்பீட்டில் தூண் தளத்துடன் 11 மாடிகளுடன் 396 குடியிருப்புகளும் என மொத்தம் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் 5.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவு கொண்டது ஆகும். இந்தத் திட்டப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மின்தூக்கி வசதி, மின்னாக்கி, தீ அணைக்கும் கருவி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணி 9.7.2018 தொடங்கப்பட்டு டிசம்பர் 2020 பெரும்பாலான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் CMDA. சென்னை மாநகராட்சி, RERA, ஆகிய அனுமதிகள் பெறாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பபடவில்லை.
தமிழ்நாடு முதல்வர் பொறுப்பேற்ற பின்பு அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்தத் திட்டப்பகுதிக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், CMDA திட்ட அனுமதியும், சென்னை மாநகராட்சி கட்டட அனுமதியும், RERA அனுமதியும் பெறப்பட்டது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் மின் இணைப்பு, குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகள் முடிக்கப்பட்டு. விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகப் பொறியாளர் சுடலை முத்துக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu