சென்னை மக்களின் நீண்டநாள் கனவு -மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள்
சென்னையின் 376 ஆண்டுகால வரலாற்றில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது இதே நாளில் தான்...
சென்னை மக்களின் நீண்டகால கனவான, மெட்ரோ ரயில் போக்குவரத்து 2015 ம் ஆண்டு இதே நாளில் தொடங்கியது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். சென்னை மாநகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையான சேவையாக இது அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழக தலைநகரான சென்னை, பல்வேறு சிறப்புக்களை கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்திய ரயில் போக்குவரத்தின் பிறப்பிடமே சென்னை நகரம் தான் என்று கூட கூறலாம். 'டிராம்' வண்டியில் துவங்கி, மேம்பால ரயில் சேவை வரை, காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில், சென்னை மாநகரின், 376 ஆண்டுகால வரலாற்றில், மற்றொரு புதுமையாக, மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான, 'குளுகுளு' வசதியுடன் கூடிய, மெட்ரோ ரயில் போக்குவரத்து இதே நாளில் 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தொடங்கியது.
பணத்தை வழங்கினால் டிக்கெட் தரும் இயந்திரம்; ஏறி நின்றால் நகரும் படிக்கட்டு; அனைத்து பெட்டிகளிலும், குளு குளு 'ஏசி' என, தமிழக ரயில் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை, தந்தது, மெட்ரோ ரயில் பயணம். ஆலந்துார் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
சென்னையில், 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் சேவைக்கு, 2009 ஜூனில் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்; சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயம்பேடு - ஆலந்துார் இடையே, முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழித்தட பணி முடிக்கப்பட்டு, 2013 நவம்பர், 6 ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
பாதுகாப்பு ஆய்வும் முடிக்கப்பட்டு, வழித்தடம் தயாரானது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் துவக்க தேதி தள்ளிப் போனது. இடைத்தேர்தல் முடிந்து மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி கிடைத்ததால் இதே நாளில் அன்று தொடங்கிவைத்தார்.
மெட்ரோ ரயிலை இயக்கிய முதல்பெண்மணிகள் இவர்கள் தான்..
ப்ரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ
முதன் முதலாக ரயிலை இயக்கிய பெண் டிரைவர் பிரீத்தி கூறுகையில்,'' மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்றார்.
முதலில் எனக்கு புறநகர் ரயில் இயக்கும் வேலையில் சேரதான் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்னரே மெட்ரோ ரயிலில் வேலை கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
28 வயதான ப்ரீத்தி சென்னை அரசு தர்மாம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ளார். தனது மகள் மெட்ரோ ரயில் இயக்குவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ப்ரீத்தியின் தந்தை அன்பு கூறினார்.
இதேபோல மற்றொரு டிரைவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "பரீட்சாத்த முறையில் முதலில் நாங்கள் பணிமைனைக்குள்ளேயே மெட்ரோ ரயிலை இயக்கி பழகினோம். அதில் சிறப்பாக செயல்பட்டதால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில்களை இயக்க நியமிக்கப்பட்டோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu