பிரபல ஆல்பட் திரையரங்கிற்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து ஜப்தி செய்தது

சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல ஆல்பட் திரையரங்கிற்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து ஜப்தி செய்தது.
2021 - 22 நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்கள் வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையின் பிரபல திரையரங்கான எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கு பல வருடங்களாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது.
அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் காசோலையாக வழங்கியதால் ஏஆர்ஓ தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சீலை அகற்றினர். இதனையடுத்து திரையரங்கம் செயல்பாட்டிற்கு வந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் வாயிலாக செலுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 8,18,451 பேர் சொத்து வரியும், 80,496 பேர் தொழில் வரியும் செலுத்தியுள்ளனர்.
இதில் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக சொத்துவரி அல்லது தொழில் வரி செலுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்பட்டால் வரி செலுத்துவோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் '1913' என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியினை செலுத்த இன்றே கடைசியாகும். தவறினால் வட்டி விதிக்கப்படுமெனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu