சென்னை மாநகராட்சி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார்
கோப்பு படம்
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்துடன் விரிவாக்கப்பட்ட புதிய பகுதிகளை இணைத்து செயல்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி 176 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க.வைச் சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே மாமன்றத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. தற்போது பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 6 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் மாமன்ற கூடத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 20 நாட்களாக இந்த பணி நடந்தது.
மேயர், துணை மேயர் இருக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மின் விளக்குகள் அனைத்தும் நவீனமாக்கப்பட்டுள்ளது. அரங்கு பிரகாசமாக இருக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாரம்பரியம், பழமை மாறாமல் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மரப்பலகைகள் அனைத்தும் வார்னிஷ் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைகளும் பழுது பார்க்கப்பட்டுள்ளன.
வருகிற 2-ந்தேதி காலை 10 மணிக்கு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. வெற்றி பெற்றுள்ள 200 கவுன்சிலர்களுக்கும் பதவி ஏற்பதற்கான அழைப்பு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக பதவி ஏற்பார்கள். ஒவ்வொருவரும் உறுதி மொழியை வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். பதவி ஏற்பு விழா அதிகபட்சம் 3 மணி நேரம் நடைபெறும்.
புதிய மேயர் பதவி ஏற்பு விழா 4-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியில்லாத பட்சத்தில் மேயராக தேர்வு செய்யப்படுகிறவருக்கு கமிஷனர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். புதிய மேயர் பதவி ஏற்றவுடன் அவரது இருக்கையில் அமர வைக்கப்படுவார். புதிய மேயர் அமருவதற்கான இருக்கை மற்றும் அவர் அணியக்கூடிய அங்கி, செங்கோல் போன்றவை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
துணை மேயர் பதவி ஏற்பு விழா 4-ந்தேதி பகல் 2.30 மணிக்கு நடைபெறும். துணை மேயராக தேர்வு செய்யப்படுபவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டு பொறுப்பேற்பார். இந்த நிகழ்ச்சி 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
புதிய மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுடன் கலந்து பேசி முதல் மாமன்ற கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
சென்னை மாநகராட்சி மேயர் வரலாற்றில் தற்போது பதவியேற்பவர் 47-வது மேயராவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu