ஏப்ரல் 9 அன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கான புதிய கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின், மாநகராட்சிக்கான பட்ஜெட், மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுவரை, மாநகராட்சி அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்முறை, மேயர் தலைமையில் பட்ஜெட் உரை வெளியாக உள்ளதால், வளர்ச்சித்திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 2016ம் ஆண்டுக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாததால், மாநகராட்சி கமிஷனருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது. மேயரின் செயல்பாடு களையும், கமிஷனரே மேற்கொள்ளும் நிலை இருந்தது.
அதன்படி, 2017 முதல் 2021 வரையிலான நான்கு நிதியாண்டு களுக்கான மாநகராட்சி பட்ஜெட், அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு, மாநகராட்சி கூட்டத்தில் வெளியிடப்படாமல், நேரடியாக, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், சிறப்பு திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஏதும் இன்றி, வழக்கமான துறை ரீதியான ஒதுக்கீடுகள் மட்டுமே இடம் பெற்றன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளிலும், புதிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க.,வை சேர்ந்த பிரியா மேயராகவும், மகேஷ்குமார் துணை மேயராகவும் பதவியேற்றனர். மேலும், பட்ஜெட் தாக்கலுக்கான நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் ஆகிய அனைவரும் பதவியேற்றனர். இதையடுத்து மாநகராட்சிக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில், 2022 - 23ம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், தற்போது மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நான்காண்டு பின் உள்ளாட்சி பிரதிநிதிகள் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால், மழை நீர் வடிகால், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றுடன், மக்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu