சென்னை விமான நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விற்பனை மையம் -மத்திய அரசு நடவடிக்கை
திறன் பயிற்சி பெற்ற கைவினைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு உருவாக்கியுள்ள அவ்சார் (AVSAR) திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்தில், சுயஉதவிக் குழுவினரின் விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில், இந்த பிராந்தியத்தில் உள்ள சுயஉதவிக் குழுவினரின், உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதுடன் அவற்றை பிரபலப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
சிறு மற்றும் கிராமப்புற சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுயஉதவிக் குழுக்கள் திகழ்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு சிறு குழுக்களாக கிராமப்புற – நகர்ப்புற பாகுபாடு ஏதுமின்றி, வருமானத்திற்கான ஆதாரங்களை சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்ள சுயஉதவிக் குழுக்கள் வழி வகை செய்கின்றன.
உலகில் ஏற்படும் பிற பேரிடர்களைப் போன்று கோவிட் பெருந்தொற்றும், இந்தக் குழுவினரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களுடைய செயல்பாடு வெகுவாக குறைந்ததுடன், தேவை குறைவு காரணமாக வாடிக்கையாளர்களை அவர்கள் சென்றடைவதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சுயஉதவிக் குழுக்களை வலுப்படுத்த மத்திய அரசு உருவாக்கிய பல அம்ச உத்திகள் அவர்களது பொருளாதார நலனில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் விமான நிலையங்களில் சுயஉதவிக் குழுவினருக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில், சுயஉதவிக் குழுவினரால் நடத்தப்படும் விற்பனை மையம் ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று அடிப்படையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 100-200 சதுர அடி இடம் ஒதுக்கப்பட உள்ளது. எனவே இங்கு விற்பனை அமைக்க விரும்பும் சுயஉதவிக் குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இணையதளமான https://www.aai.aero/en/node/add/shg-user-detail வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை விமான நிலைய மக்கள் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu