மீண்டும் செயல்படத் தொடங்கியது சென்னை விமான நிலையம்
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தேங்கிய மலைநேர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக்ஜம் புயலாக வலுப்பெற்றது. தீவிரப்புயலாக வலுப்பெற்ற மிக்ஜம், தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அப்புயலானது இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ளது.
முன்னதாக, மிக்ஜம் புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததால் வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, பேருந்து, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மிக்ஜம் புயல் காரணமாக, சென்னை விமான நிலைய ஓடுபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 விமானங்கள், மழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. பின்னர் அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
அதேபோல், சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, நேற்றிரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இன்று காலை 9 மணி முதல் புறப்பாடு, வருகை என விமான சேவைகளும் செயல்படத் தொடங்கின. ஆனால், முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பாத காரணத்தால், மிகவும் குறைவான அளவிலேயே விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வரவேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 87 விமானங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்த தகவல்கள் சென்னை விமான நிலைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது அந்தந்த விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை நின்றுள்ளது. தேங்கியிருந்த நீரின் அளவும் குறைந்து வருகிறது. இருப்பினும், ஓடுபாதை இன்னும் முழுமையாக சீராகவில்லை. அவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விமான நிலையத்தில் சிக்கியுள்ள 1500 பயணிகளுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu