சென்னையில் 2 மாதத்தில் 585 மாடுகள் பிடிக்கப்பட்டு 9,06,750 ரூபாய் அபராதம்..!
பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றி திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1550/- விதிக்கப்படுகிறது. அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டு தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க சுகாதார ஆய்வாளர், மண்டல நல அலுவலர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூகிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன்
இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 26.022022 அன்று 21 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.32550/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜனவரி மாதம் 287 மாடுகளும், பிப்ரவரி மாதம் 298 மாடுகளும் என மொத்தம் கடந்த 2 மாதங்களில் 585 மாடுகள் பிடிக்கப்பட்டு தலா 1550 வீதம் ரூ.9,06,750 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu