எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிந்த பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு
கச்சா எண்ணெய் கசிந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்
அண்மையில் பெய்த கனமழை காரணமாக எண்ணூர், மணலி, திருவெற்றியூர் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், அப்பகுதி மக்களின் உடைமைகள் பெருத்த சேதத்திற்கு உள்ளான நிலையில், வெள்ளம் வடிந்த பிறகு, வெள்ளநீருடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவு ஆயிரக்கணக்கான வீடுகளின் சுவர்களில் படிந்திருந்தது தெரிய வந்தது.
சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்த எண்ணெய் கழிவு வெள்ள நீருடன் கலந்து கடல் நீரை மாசுப்படுத்தியதுடன், மீனவர்களின் படகுகள், வலைகள், என்ஜின்கள் ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இதனுடைய தாக்கம் 2017 ஆம் ஆண்டு இரண்டு கப்பல்கள் மோதியதால் 251 டன் எண்ணெய் கொட்டியதை விட மிக அதிகம் என்றும், இதன் காரணமாக தரையில் நிற்க வைக்கப்பட்டிருந்த படகுகளை எடுக்கவே முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்தனர்.
சிலர் படகுகளை எடுத்து மீன்பிடித் தொழிலை மேற்கொண்ட நிலையில், அந்த மீன்களை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும், இப்பகுதிகளில் வசிக்கும் பலர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எண்ணூர், மணலி, திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கனமழையினால் பெருத்த இழப்பை சந்தித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் கழிவு என்பது அவர்களுடைய வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதிலிருந்து அப்பகுதி மக்கள் மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிந்த பகுதியில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதியில் கச்சா எண்ணெய் கலந்தது. அந்த பகுதியை தமிழக அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் .
தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu