Cyclone Michaung கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது இன்று முற்பகலில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், நாளை (டிச.5) ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடி பகுதியில் அதிகபட்சமாக 29 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதேபோல் ஆவடி பகுதியில் 28 செ.மீ., ஆலந்தூர் விமான நிலைய பகுதிகளில் தலா 25 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை மிக்ஜாம் புயல் அடித்து புரட்டி போட்டுள்ளது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிகிறது.
இடைவிடாது பெய்து வரும் மழையால் சென்னையே தத்தளிக்கிறது. சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன.
அதைபோல சென்னை குன்றத்தூரில் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மழைநீரில் இருந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காப்பதற்காக மக்கள் மேம்பாலத்தில் தங்களது வாகனங்கள் நிறுத்திவைத்துள்ளனர். மேம்பாலத்தின் ஒருபுறம் கார்கள், மறுபுறம் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வேளச்சேரி புதிய மேம்பாலம் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu