ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையாக மாற்றலாமா? தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம்.

ரேஸ் கிளப் நிலத்தை  நீர்நிலையாக மாற்றலாமா? தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம்.
X
கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக, வேளச்சேரி பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, ஏரியின் கீழ் பகுதியில் உள்ள 5 ஏரிகளை ஆழப்படுத்தி, நீர் கொள்திறனை அதிகப்படுத்துவது, ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் இருந்தால் அவற்றை ஆழப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையில் சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945-ம் ஆண்டு முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால் குத்தகையை ரத்து செய்து, அங்கு மிகச்சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிண்டி ரேஸ் கிளப்பில் இயங்கிய இடத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக அளவு நீரைச் சேமித்தை, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இது குறித்து தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும். புதிய நீர்நிலையை உருவாக்குவது குறித்து அரசிடம் பதில் பெற்று, அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த முடிவு கிண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைக்க உதவும். புதிய நீர்நிலை அதிகப்படியான மழைநீரை சேமிக்கும், இது நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையாக மாற்றும் முடிவு சென்னையின் நீர் மேலாண்மையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும். இது வெள்ள பாதிப்பை குறைப்பதோடு, நகரின் பசுமையை அதிகரிக்கவும் உதவும். ஆனால் பாரம்பரியத்தை பாதுகாப்பது மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை கவனிப்பது போன்ற சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!