கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை எப்போது? அமைச்சர் விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை எப்போது? அமைச்சர் விளக்கம்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்  சிவசங்கர் 

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவை தொடங்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் . சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” இன்றைக்கு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும். பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும்.

அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும். கோயம்பேட்டிற்கு செல்லாது.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும்.

சாதாரண நாள்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும்.

ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.

அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.

அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் - விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.

பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதன் காரணத்தால், பொங்கல் வரை சென்னை நகரத்திலிருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து அந்த ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை நாளையிலிருந்தே முழுமையான செயல்பாடு இங்கிருந்து தொடங்கும். மாநகர போக்குவரத்து கழகம் நாளை காலையிலிருந்து இங்கிருந்து சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு போக்குவரத்து கழகத்தின் மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் பொங்கல் வரை கிளாம்பாக்கம் வழியாக செல்பவை, பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்