அவிநாசியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய கோவில் ஊழியர் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவில் ஊழியர் கலாமணி.
அவிநாசியில் பிரசித்திபெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு மதிய வேளையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவிநாசி, கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மனைவி தங்கமணி, மகள் இந்திராணி (வயது 38) இவர், கண் பார்வையற்ற, மாற்றுத்திறனாளி.
நேற்று முன்தினம் மதியம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தங்கமணியும், இந்திராணியும் சென்றனர். அன்னதான வரிசையில் இருவரும் நின்ற போது, தங்கமணிக்கு டோக்கன் கிடைத்த நிலையில், இந்திராணிக்கு டோக்கன் கிடைக்கவில்லை. ஆனால், டோக்கன் இல்லாமலேயே சிலரை, கோவில் துப்புரவு ஊழியர் கலாமணி (வயது 54), அன்னதான கூடத்துக்கு சாப்பிட அனுமதித்துள்ளார். இந்திராணி, இதுகுறித்து கலாமணியிடம் கேள்வி கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கலாமணியும், அங்கிருந்த சில பெண் ஊழியர்களும் சேர்ந்து இந்திராணியை தாக்கினர்.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அன்னதானக்கூடத்தில் உள்ள சி சி டி வி கேமரா பதிவு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய துப்புரவு ஊழியர் கலாமணியை, அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்
தாக்கப்பட்ட பெண் இந்திராணி வலிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் நேற்று சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறி்த்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu