பொதுமக்களுக்கு இடையூறு: கைது செய்யப்படுகிறாரா அதிமுக மாவட்டச் செயலாளர்?
அதிமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ். (கோப்பு படம்).
மறைந்த அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5 ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அந்தக் கூட்டம் நடைபெற்ற போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்புவதற்காக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் எல்.இ.டி. திரை வைத்து ஒளிபரப்பியதாகவும் திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், தெற்கு மண்டல செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் அன்பு ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சாலையின் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறுவது தவறான குற்றச்சாட்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
புகார்தாரரான தமிழ்செல்வன் தரப்பில், உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும் எல்.இ.டி. திரைகளை வைத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு உள்ளதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில் 21 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் சிலர் தலைமறைவாக உள்ளதால், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறி, பொதுக்கூட்டம் நடந்த அன்று காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் குறுந்தகடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, குறுந்தகட்டை ஆய்வு செய்த நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பை கக்கும் கலை நிகழ்ச்சி நடத்தியது, மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்தது ஆகியவை நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி, இவை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு முரணானது என்பதால், மூவரின் முன்ஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அதிமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu