கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விட நடவடிக்கை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.
இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எருமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.
இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu