ஆவின் பால் விலை உயர்வு! மக்கள் அதிர்ச்சி!

ஆவின் பால் பச்சை நிறம் 5 லிட்டர் பாக்கெட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால், உணவகங்களில் டீ, காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பால். ஹோட்டல்கள், டீக்கடைகள் என டீ, காபி, ரோஸ்மில்க், பாதாம் பால் என பாலை பயன்படுத்தி பல்வேறு தேவைகள் இருக்கின்றன. மற்றவைகளுக்கு இல்லையென்றாலும் டீ, காபி, பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கும் பால்தான் முக்கிய ஊட்டப்பொருளாக இருக்கிறது.
உணவகம் வைத்து நடத்துபவர்கள் பொதுவாகவே பாக்கெட் பால் வாங்கி டீ, காபி தயார் செய்வதுதான் வழக்கம். இதனால் விலை அதிகமாகும்போது அவர்கள் டீ, காபி கட்டணத்தையும் உயர்த்திவிடுகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) தான் ஈடுபட்டு வருகிறது.
27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து ஆவின் சார்பில் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல் தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், ஆவின் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 5 லிட்டர் கொள்ளவு கொண்ட பச்சை பாலின் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
இப்போது வரை, 5 லிட்டர் பச்சை பால் தற்போது ரூ.210 ஆக விற்பனையாகி வரும் நிலையில், இனி ரூ.220க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு அரை லிட்டர், ஒரு லிட்டர் என வாங்கும் வீடுகளைப் பாதிக்காது. அதே நேரம் வணிக ரீதியாக வாங்கி டீக்கடைகளில் பயன்படுத்துபவர்களுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வெளியில் டீ, காபி குடிப்பவர்களும், டீக்கடை உரிமையாளர்களும் கொஞ்சம் கலக்கத்தில்தான் இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu