சென்னையில் வரும் 29ம் தேதி பெண் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு

பைல் படம்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜே.பி. ஓட்டலில் வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்கு பெண் பத்திரிகையாளர்கள் மற்றுமு் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ‘ஊடக நிபுணர்கள் – 2023: இணைத்தல், கற்றல் மற்றும் முன்னேறுதல்’ என்ற தலைப்பிலான பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, நடத்தப்படும் இந்தச் சிறப்புப் பயிலரங்கு, அவர்களது துறை சார்ந்த நுணுக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், வாய்ப்பை வழங்கும் ஒரு தனித்துவமான மேடையாகும்.
அச்சு, மின்னணு, வானொலி மற்றும் டிஜிட்டல் ஊடகம் உள்ளிட்ட ஊடகத் துறையின் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த பெண்களை ஒன்று சேர்ப்பதை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், தாங்கள் பெற்ற அனுபவங்கள், எதிர்நோக்கிய சவால்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு தளமாக இது அமையும்.
‘இணைத்தல், கற்றல். முன்னேறுதல்’ என்ற கருப்பொருளுடன் கூடிய இந்த நிகழ்ச்சி, ஊடகத் துறையில் உள்ள பெண்கள் ஒன்று சேரவும், நிபுணர்களுடமிருந்து கற்றுக் கொள்ளவும், தங்களது சாதனைகளைத் தகவமைத்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும். ஊடக நெறிமுறைகள், டிஜிட்டல் ஊடகம், பாலின பிரதிநிதித்துவம், தொழில் முறை முன்னேற்றம் உள்ளிட்ட ஊடகத் தொழில் சார்ந்த பல்வேறு தலைப்புகள் குறித்து கலந்துரையாடல் அமர்வுகள், சிறப்பு சொற்பொழிவுகள், குழு விவாதங்கள் ஆகியவை இந்தப் பயிலரங்கில் இடம் பெறும்.
பெண்கள் தங்களது அனுபவங்களையும், நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு பாதுகாப்பான, ஆதரவான தளத்தை வழங்குவதுடன், ஊடகத் துறையில் பன்முகத்தன்மையையும், உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஊடக நிபுணர்கள் பயிலரங்கு ஒரு சிறப்பான முன்முயற்சியாகும். மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, துறையில் ஈடுபாடு மிக்கவர்களாக, சென்னையில் உள்ள பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு அதிகாரமளிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமையும்.
இந்த நிகழ்ச்சி வரும் 29-ந் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோயம்பேடு ஜே.பி. ஓட்டலில் நடைபெறும். மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினர் கௌதமி தாடிமல்லா கௌரவ விருந்தினராகப் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் தலைமை வகிப்பார். கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை அறிமுகவுரை நிகழ்த்துவார்.
வழக்கமான செய்திகளை தவிர்த்தல், நெறிமுறைகளை கருத்தில் கொள்ளுதல், பாலினம் சார்ந்த வன்முறை செய்திகளை வழங்குதல், இந்திய ஊடகத் துறையை ஒழுங்குபடுத்துவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பங்கு, செய்தி அறைகளில் பெண்களின் தலைமைத்துவம், பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் துன்புறுத்தல், டிஜிட்டல் பாதுகாப்பு உட்பட ஊடகத் துறையில் பெண்களுடன் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளிலான விவாதங்களை இந்த நிகழ்ச்சி கொண்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் ஊடகத் துறையைச் சேர்ந்த பிரபலமான பேச்சாளர்களின் உரைகள் இடம்பெறும். மூத்த பத்திரிகையாளர் சுஷீலா ரவீந்திரநாத், ‘ஊடகத் துறையில் பெண்கள்: வழக்கமான செய்திகளை தவிர்த்தல் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணுதல்’ என்னும் தலைப்பிலும், தி இந்து நாளிதழின் ஆசிரியர் குழுத் தலைவர் ரம்யா கண்ணன், ‘பெண்கள் பிரச்சனைகளை வெளியிடுதல்: நெறிமுறைகள் பரிசீலனை & பாலின வன்முறையை வெளியிடுதல்: உணர்வுபூர்வ செய்திகளுக்கான உத்திகள்’ குறித்து உரையாற்றுவார்.
அகில இந்திய வானொலியின் இணை இயக்குனர் லீலா மீனாட்சி, ‘இந்திய ஊடகத் துறையை ஒழுங்குபடுத்துவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பங்கு’ குறித்து உரையாற்றுவார். மூத்த பத்திரிகையாளர் ஜெனிபர் அருள், ‘செய்தி அறைகளில் பெண்களின் தலைமைத்துவம், பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் துன்புறுத்தல்’ என்ற தலைப்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.
‘பீடு நடையுடன் முன்னேறுதல்: பெண்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’, ‘ஊடகத் துறையில் பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு: சமூக ஊடக யுகத்தில் பாதுகாப்பாக இருத்தல்’ என்பது குறித்த அனைவரும் பங்கேற்கும் விவாதத்துடன் நிகழ்ச்சி நிறைவடையும். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் விவாதத்தை நெறியாளுகை செய்வார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu